நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை!

editor 2

நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்பாக கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கவுள்ளதையடுத்து முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளையும், சுங்கத்துறைக்கு சொந்தமான படகில் கடலுக்குள் சென்று பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் .

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

நாகபட்டினம் சிறுதுறைமுகத்திலிருந்து, 60கடல் மைல்கள் தொலைவில்,இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு கடல்சார் சபை, மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மற்றும் தமிழக அரசு இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

நாகபட்டினம் துறைமுக கால்வாய் தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

பயணியர் கப்பல் பயணம், வெளி நாட்டு பயணம் என்பதால் மத்திய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகபட்டினம் துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் எதிர்வரும் ஒக்ரோபர் 2ஆம் திகதிக்குள் நிறைவு பெற்று, ஒக்ரோபர் 15 ஆம் திகதிக்குள் மத்திய அரசு அனுமதியுடன் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது – என்றார்.

மேலும், வரலாற்று சிறப்புமிக்க கப்பல் போக்குவரத்தால் இலங்கை மற்றும் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பெறுவதுடன் இரு நாட்டிற்கு இடையே நல்லுறவு ஏற்படும் என்றும் கூறினார்.

Share This Article