‘மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள்.’ இவ்வாறு பிரதமர் தினேஷ்குணவர்தன உறுதியளித்தார்.
திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது குண்டர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேவேளை, அனுராதபுரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
‘நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. கொட்டன்கள் கொண்டு தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் கைது செய்யப்படுவார்கள்.
இந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.
நாட்டில் இன வன்முறையைமீண்டும் தூண்டச் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது.’ – என்றார்.