நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை எதிர்மறையான திசையில் (பின்னடைவு) பயணிப்பதாகவும், அண்மையகாலங்களில் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் மந்த போசனைக்குறைபாடு நாட்டின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ் கடந்த சில நாட்களாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகள், பிராந்திய செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு முக்கிய தரப்பினரைச் சந்தித்து நாட்டின் சமகால நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துவருகின்றார்.
அந்தவகையில் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி, சூழலியல் பாதுகாப்பு, காலநிலைமாற்ற சவால்கள் போன்ற விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ{க்கும் இடையிலான பிரத்யேக சந்திப்பொன்றும் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எவ்விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று ஐ.நா வதிவிடப்பிரதிநிதியால் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடம் வினவப்பட்டது. அதற்குப் பதிலளித்த சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர் தற்போது நாட்டின் அரசியலமைப்பு, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், மனித உரிமைகள் நிலைவரம், நல்லிணக்க செயன்முறை உள்ளிட்ட அனைத்தும் பிரச்சினைக்கு உரியனவாகவே இருக்கின்றன என்றும், எனவே இவற்றை சீரமைப்பதற்கு அவசியமான அழுத்தங்களை ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்தின்மீது பிரயோகிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளை இலங்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை தலையீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்திய பிறிதொரு பிரதிநிதி, குறிப்பாக மதரீதியான கடும்போக்குவாதத்தையும் வெறுப்புணர்வையும் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று சூழலியல் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இயங்கிவரும் சிவில் சமூக அமைப்பொன்றின் தலைவர், சூழலியல் விவகாரங்கள் தொடர்பான சுமார் 35 வழக்குகள் தொடர்பிலும், நாட்டின் தனித்துவமானதும் பெறுமதிவாய்ந்ததுமான இயற்கை வளங்களை அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கிவருவது குறித்தும், தொடர்ந்து பதிவாகிவரும் காடழிப்பு சம்பவங்கள் பற்றியும் மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ்சிடம் எடுத்துரைத்தார்.
மேலும் தொடர்ச்சியாகக் காலந்தாழ்த்தப்பட்டுவரும் தேர்தல்கள் குறித்து பிரஸ்தாபித்த சிவில் சமூகப்பிரதிநிதியொருவர், மேற்கூறப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்குமான முதன்மை மாற்றத்தைத் தேர்தல்களை விரைவில் நடாத்துவதன் மூலமே ஏற்படுத்தமுடியும் என்றும், அதுவே ஆக்கபூர்வமான மாற்றமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
இவற்றை செவிமடுத்த ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்ஞ், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை எதிர்மறையான திசையில் (பின்னடைவு) பயணிப்பதாகவும், அண்மையகாலங்களில் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் மந்தபோனைக்குறைபாடு நாட்டின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின்போது சமூகப்பாதுகாப்பு உள்ளிட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்கு அவசியமான நிதி தம்மிடம் இல்லை என்றும், இவ்விடயத்தில் மீள்ஒருங்கிணைப்பு மற்றும் மீள்திட்டமிடலை மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி கூறிய விடயம் குறித்து ஐ.நா வதிவிடப்பிரதிநிதி சற்று அதிருப்திகரமான தொனியில் கருத்து வெளியிட்டார்.
குறிப்பாக நாட்டின் இயங்குகை இளைஞர்களை மையப்படுத்தியதாக அமையவேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் வயது மூத்தவர்களாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்களைப் பார்த்து நகைத்தவண்ணம் ‘இங்கு வருகைதந்திருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் வயது முதிர்ந்தவர்களாகவே இருக்கின்றீர்கள்’ என்று தெரிவித்த அவர், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.