மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது!

editor 2

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2012 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

மராகேஷூக்கு தென்மேற்கே 71 கிலோ மீற்றர் (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மரக்கேஷ் மற்றும் தெற்கில் பல பகுதிகளில் மக்கள் உயிரிழந்துள்ளதாகஅந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு செல்வதில் பெரும் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக பழைய கட்டடங்களால் ஆன கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்ல சில நாட்கள் ஆகலாம்.

மொரோக்கோ கடற்கரையில் உள்ள கேனரி தீவுகள் மற்றும் அதன் கிழக்கு அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள மக்கள் கூட நிலநடுக்கத்தைஉணர்ந்ததாக கூறுகிறார்கள்.
அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மராகேஷின் தெருக்களில் தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கின்றன.

நகரின் பழமையான சுவர்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மராகேஷில் சில கட்டடங்கள் இடிந்து விழுந்துவிட்டன என்று அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

நிலநடுக்கம் காரணம் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

‘நாங்கள் மிகவும் கடுமையான நடுக்கத்தை உணர்ந்தோம். நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் இருந்தனர். குழந்தை கள் அழுது கொண்டிருந்தனர், பெற்றோர்கள் கலக்கமடைந்தனர்’ என்று அப்தெல்ஹாக் எல் அம்ரானி என்பவர் தெரிவித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட 10 நிமிடங்களில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கடலோர நகரங்களான ரபாட், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸெளயிராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

Share This Article