இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க செனெட் சபையின் செல்வாக்குமிக்க உறுப்பினரும், இலங்கை – அமெரிக்க உறவுகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி செயலாற்றியவருமான கிறிஸ் வான் ஹொலென் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.
இவ்விஜயத்தின்போது அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவர் இல்லத்தில் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் பல்வேறு அரசியல்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஜீ.எல்.பீரிஸ், மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின்போது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைவரம், தேர்தல்களை நடாத்துவதில் தொடர் தாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளில் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை கிறிஸ் வான் ஹொலென், அமெரிக்க செனெட் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் பிரதிநிதிகளுடன் சிறந்த தொடர்பைப் பேணிவருவதாகவும், எனவே இவ்விடயங்கள் தொடர்பில் அங்கு ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனின் இலங்கை விஜயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கத்தூதரகம், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதே அவரது வருகையின் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறைசார் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல், பொருளாதாரத்தொடர்புகளை மேம்படுத்தல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களைக் கையாள்வதற்குக் கூட்டிணைந்த செயற்திட்டங்களை உருவாக்கல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்தல் என்பனவும் கிறிஸ் வான் ஹொலெனின் விஜயத்தின் ஏனைய நோக்கங்கள் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கான விஜயம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கிறிஸ் வான் ஹொலென், ‘நாம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்புகளின் 75 ஆவது வருடப்பூர்த்தியை இவ்வாண்டு கொண்டாடுகின்றோம். இந்த பல தசாப்தகால நட்புறவைக் கொண்டாடும் அதேவேளை, இனிவரவிருக்கும் தசாப்தங்களுக்கான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம். இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதிலும் பொருளாதாரம், கடற்பிராந்தியப்பாதுகாப்பு, காலநிலைமாற்ற சவால்கள் போன்ற பல்வேறு விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இவ்விஜயம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. அதேவேளை இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.