சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் (வயது 66) வெற்றிபெற்றுள்ளார். இலங்கை வம்சாவளி தமிழரான இவரின், பாட்டானார் யாழ்ப்பாணம் – ஊரெழுவை சேர்ந்தவராவார்.
2011ஆம் ஆண்டுக்கு பின்னர் சிங்கப்பூரில் நடந்த முதல் ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். சீன வம்சாவளியை சேர்ந்த இரண்டு போட்டியாளர்ளை தர்மன் சண்முகரத்தினம் தோற்கடித்தார்.
இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 27 இலட்சம் பேர் தகுதி பெற்றிருந்தனர். நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு நேற்றிரவு 8 மணி வரை தொடர்ந்தது. இதில், தர்மன் சண்முகரத்தினம் 70.4 வீத வாக்குகளை பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எங் கோக் சோங் 15.7 வீத வாக்குகளையும் டான்கின் லியான் 13.88 வீத வாக்குகளையும் பெற்றனர்.
2001 ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சியின் ஊடாக அரசியலுக்கு வந்த தர்மன் சண்முகரத்தினம். வணிகத்துறை அமைச்சர், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். 2006ஆம் ஆண்டு நிதிஅமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்.
2011 – 2019ஆம் ஆண்டு வரை துணைப் பிரதமராக பணியாற்றினார். தற்போது ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரின் ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார்.
இவரின் பதவிக்காலம் எதிர்வரும் 13ஆம் திகதி நிறைவுறுகிறது. இதைத் தொடர்ந்து 9ஆவது ஜனாதிபதியாக சண்முகரத்தினம் பதவியேற்பார்