ஒரு இலட்சம் பேர் வரையில் காணாமல் ஆக்கப்பட்டிருக்கக்கூடும் – இலங்கை தொடர்பில் மன்னிப்புச் சபை!

editor 2

இலங்கையில் உள்நாட்டுப்போருடன் தொடர்புபட்டவகையில் 60,000-100,000 பேர் வரையில் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும், இருப்பினும் அவற்றில் பெரும்பான்மையான சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.

வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளின் ‘வலிந்து காணாமலாக்கப்பட்டோர்’ நிலைவரத்தை உள்ளடக்கி சர்வதேச மன்னிப்புச்சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் கடந்த 40 வருடகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப்போருடன் தொடர்புபட்டவகையில் சுமார் 60,000 – 100,000 பேர் வரையில் வலிந்து காணாமலாக்கப்பட்டிருக்கக்கூடுமென தாம் மதிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை, இருப்பினும் இவற்றில் பெரும்பான்மையான சம்பவங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதுடன் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கடந்த 6 வருடகாலமாகத் தொடர்ச்சியாகக் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி அவரது அலுவலகத்திலிருந்து புறப்பட்டதன் பின்னர் காணாமல்போனார். அவர் காணாமல்போவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்து கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பல வருடங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை கண்டறியப்படவில்லை. எனவே இதுகுறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், பிரகீத் எக்னெலிகொட காணாமல்போனமைக்குக் காரணமானவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Share This Article