குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று நிலைமையை அவதானித்தனர்.
குருந்தூர்மலையில் 1933.05.12 அன்று வர்த்தமானி ஊடாக 78 ஏக்கர் 2ரூட் 12 பேர்ச் காணி தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், 306 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நோக்கில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக்கற்களை நாட்டியது.
இந்த நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு அப்பகுதியில் பரம்பரையாக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்கள் கோரி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பில் உயர் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நேற்று அங்கு சென்றிருந்தனர்.
இந்த களப்பயணத்தில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க. கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர் ஆர். டி. ஜெயதிலக, மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களங்களின் அதிகாரிகள்பங்கேற்றிருந்தனர்.
இருப்பினும், காணிகளில் விடுவிப்பு குறித்து சாதகமான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தி அதனூடாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.