உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய நாட்டின் தேசிய உற்பத்தி வருமானமானது 5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் வரி பிரச்சினைக்கு முன்னதாகவே இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையில், இலங்கை பின்னோக்கிச் செல்கிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று தேசிய மக்கள் சக்தி எண்ணினால் அவ்வாறு வெற்றி பெற முடியாது. பெரும்பாலான இடங்களில் பெரும்பான்மை இருப்பதாக பலர் எண்ணுகின்றனர்.
நாம் அவற்றை ஒன்றிணைத்து வெற்றி பெறவே எதிர்பார்க்கின்றோம். நாம் மாத்திரமல்ல. ஏனைய குழுக்களும் ஒன்றாக இணைந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் எமக்கு தெரியாது. ஆனால் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணையும் போது அதிகளவான உறுப்பினர்களைக் கொண்ட தரப்பிலிருந்தே பொதுச் செயலாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். அவ்வாறெனில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள நாம் பாடுபட வேண்டும்.
அவ்வாறு பெற்றுக் கொண்டால் ஏனையோரை தங்கியிருக்க வேண்டியேற்படாது. தற்போதிருப்பது மிக பலமான ஜனநாயக அரசாங்கம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
தாம் கடிதம் அனுப்பியதால் தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி அறிவீட்டை 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். இவ்வாறான பொய்களுக்கு இனியும் ஏமாறக் கூடாது. பாராளுமன்றத் தேர்தலிலும் தமக்கு ஒரு வாய்ப்பினை வழங்குமாறு கோரினர்.
மக்கள் அதனையும் வழங்கினர். ஆனால் இன்று என்ன நடந்திருக்கிறது? ஊழல் ஒழிப்பு சட்டம் குறித்த நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறும் போது அது குறித்து பேச முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால் அவ்வாறு எந்தவொரு ஏற்பாடும் அதில் இல்லை. அவர் அந்த சட்டத்தை முழுமையாக படிக்கவில்லை என்பது இதிலிருந்தே தெளிவாகிறது. இதனை கடந்த டிசம்பரில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும், தேர்தல்கள் மற்றும் ஆட்சி மாற்றத்தால் அதனை செய்ய முடியாது போனது.
இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாம் ஊழல் ஒழிப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தியதால் தான் இன்று சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் அதனை அரசியல் தலையீடின்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எம்மால் தான் இவர்களால் இதனை செய்ய முடிந்துள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஆனாலும் இந்த அரசாங்கத்தால் ஊழலை முற்றாக ஒழிக்க முடியவில்லை. மாறாக 300 கொள்கலன்களை காணாமலாக்கவே முடிந்தது.
நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் கடன் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கினோம். எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய 80 பில்லியனில் 3 பில்லியன் இரத்து செய்யப்பட்டது. 25 பில்லியன் 20 ஆண்டுகள் கால அவகாசம் நீடிக்கப்பட்டது.
அதற்கமைய 28 பில்லியனுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. 2028 இலிருந்து கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. அன்று 6 பில்லியனாகக் காணப்பட்ட இருப்பு தற்போது 6.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.
2024இல் தேசிய உற்பத்தி வருமானம் 5 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய இது 3.5 சதவீதமாக வீழச்சியடைந்துள்ளது. ட்ரம்ப்பின் வரி பிரச்சினைக்கு முன்னதாகவே இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்து செல்லும் நிலையில், இலங்கை பின்னோக்கிச் செல்கிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இன்று எவரும் இது தொடர்பில் பேசுவதில்லை. ஊடகங்களும் இது தொடர்பில் பேசுவதற்கு அஞ்சுகின்றன என்றார்.