யாழ். மாவட்டத்தில் கத்தி முனையில் தங்க நகைகள் கொள்ளையிடும் சம்பவங்களின் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலையும் நல்லூர், சங்கிலியன் வீதியில் உள்ள பிரதேச செயலக அரச உத்தியோகத்தர்களின் வீட்டில் 20 பவுண் நகையும் ஒரு தொகை பணமும் திருடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுடைத்து நுழைந்து,வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ்வாரம் பதிவாகியுள்ளன.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில், அதற்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதியில் ஒரு வீட்டில் கத்தி முனையில் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.
அந்த வீட்டின் கணவன் – மனைவி இருவரும் உடுவில் பிரதேச செயலகம், நல்லூர் பிரதேச செயலகம் ஆகியவற்றில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள். வீட்டின் பின் கதவை உடைத்து உள்நுழைந்த முகத்தை மறைத்த மூவரடங்கிய கும்பல் வீட்டில் அறைக்குள் உறக்கத்தில் இருந்த மகனை எழுப்பிகையையும் காலையும் பிணைத்து கட்டிவைத்து தாக்கி கத்தி முனையில் அச்சுறுத்தி வீட்டிலிருந்த 20 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் திருட்டுஇடம்பெற்ற வீட்டுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கடந்த புதன்கிழமையிலிருந்து தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின்கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சந்தேக நபர்கள் இதுவரைகைது செய்யப்படவில்லை.