நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர்.
வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி நேரத்தில் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கு இடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டிருந்தது.
சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமையினால், சபைக்கு தலைமைத் தாங்கிய, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸவினால், நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து, முற்பகல் 10.50 அளவில் மீண்டும், சபை அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், கூடியது.
இதன்போது, 10 நிமிடங்கள் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டமையினால், நாடாளுமன்றில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், நாடாளுமன்ற ஒழுக்க கோவையினை மீறி செயற்பட்டமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை இன்றைய அமர்வில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.