குருந்தூர் மலையில் இன்று பொங்கல்; தடுக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவு!

editor 2

குருந்தூர் மலையில் இன்று இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கான உரிமையை தடுப்பதற்கோ அல்லது பாதகம் செய்வதற்கோ எவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு வவுனியா மன்னார் தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளரால் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குருந்தூர் மலையில் இன்று பொங்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றால் அங்கு மதக்கலவரம் உருவாகி உயிராபத்து ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்து முல்லைத்தீவு காவல்துறையினரால் அதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரப்பட்டது.

இந்தநிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், அங்கு பொங்கல் வைத்து வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அந்த பிரதேச மக்களுக்கு உரிமை உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த பொங்கல் நிகழ்வினை மேற்கொள்ளவுள்ள தரப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது.

இதன்படி, தொல்பொருள் திணைக்களத்தினால் 7 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு – பாதிப்பு ஏற்படாதவாறு தொல்லியல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் திறந்தவெளியில் தொல்பொருள் அல்லாத கல், செங்கல், மணல் போன்ற ஆதரவின் மீது இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களைப் பயன்படுத்தி அடுப்பு தயார் செய்து அதில் பொங்கல் சமைப்பதில் ஆட்சேபனை இல்லை என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த இடம் தொல்பொருளியல் பாதுகாப்பு காப்பக இடமாக உள்ளதுடன் வன பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வனப்பகுதியாக காணப்படுவதனால் இந்த இடத்தில் தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தொல்பொருளியல் எச்சங்கள் மேற்பரப்பில் காணப்படாததும், நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நினைவுச்சின்னங்களில் இருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளால் குறிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்படும் இடத்தை மட்டுமே இதற்காக பயன்படுத்த வேண்டும்.

அகழ்வு செய்யப்பட்ட எல்லைகளில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதன் எல்லை, அரண்களில் இந்த நிகழ்வில் நடத்தப்பட கூடாது.

அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மீது உணவு, பழங்கள், திரவப்பொருட்கள், தேங்காய் போன்றவற்றை நேரடியாக வைக்க வேண்டாம் எனவும் தொல்பொருள் திணைக்களம் நிபந்தனை விதித்துள்ளது.

தொல்பொருட்கள் மீது தேங்காய் உடைத்தல் அல்லது பால் போன்ற திரவப்பொருட்களை தெளித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

வழிபாட்டு நடவடிக்கையால் தொல்பொருளியல் இடம், நிலத்திற்கு கீழ் உள்ள தொல்பொருட்கள் மற்றும் அதன் கட்டமைப்புகளிற்கு எந்த விதமான சேதமும் ஏற்படக்கூடாது.

பொங்கல் பண்டிகைக்காக கூடும் மக்களால் இடத்தை வழிபடவரும் மற்றத் தரப்பினருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் எனவும் தொல்பொருள் திணைக்களம் நிபந்தனை விதித்துள்ளது.

Share This Article