“பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். ஒன்றித்த நாட்டுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் இன்று (15) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு காலி நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேண தேசிய ஒற்றுமை மிகவும் அவசியம். நாட்டின் அனைத்து பிரஜைகளும் சமமாக கருதப்பட்டு ஒவ்வொரு சமூகத்துக்கும் சுயமரியாதையுடன் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும். இன்று இவை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
மகா சங்கத்தினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிறந்த முறையில் பெற்றுக்கொண்டு பாதகமான காரணிகளை நீக்கி சாதகமான காரணிகளுடன் சமய சேவை, சமூக சேவை மற்றும் முற்போக்கு அரசியல் பயணத்தை முன்னெடுக்கும் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்கின்றது.
கடந்த கால ஆட்சியாளர்களின் பணியாற்றுகைகளைப் பார்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை மதிப்பிட வேண்டாம் என மதிப்புக்குரிய மகாசங்கத்தினரிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள விசேட இடம் எப்போதும் பாதுகாக்கப்படும். ஏனைய மதங்களும் சமயங்களும் பாதுகாப்பாக இருக்கச் செயற்பட வேண்டும்.
நாட்டில் பிளவு ஏற்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. எனவே, அந்தப் பிரிவினையை இல்லாதொழிக்க வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக அனைத்து மக்கள் சமூகங்களும் தம்மை அர்ப்பணிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் செயற்படும்.
புத்தசாசன அமைச்சும் புத்தசாசன நிதியமும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவால் நிறுவப்பட்டது. சகோதர ஏனைய மதங்களைப் பாதுகாப்பதற்காக தனியான அமைச்சுக்களையும் அவர் நிறுவினார்.” – என்றார்.