அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் டலஸ் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:-
“அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கதைக்கின்றார். ஆனால், மக்களுக்கு தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கு தேர்தலொன்று இல்லை.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு வாக்குகளை இலக்கு வைத்தே 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜனாதிபதி பேசுகின்றார். அதேபோல் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் திசை திருப்பவே முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல் பற்றி தகவல்கள் பரப்படுகின்றன.
இந்த ஜனாதிபதி முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்த மாட்டார். ஆனால், 2024 ஜுலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு கட்டாயம் வெளியாக வேண்டும். இதனை எவரும் பிற்போட முடியாது. அரசமைப்பிலும் அதற்கு இடமில்லை.” – என்றார்.