13 ஐ முழுமையாக அமுல்படுத்த ஒருபோதும் இடமளியோம்! – கம்மன்பில திட்டவட்டம்

editor 2

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். 13 இற்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பை ஒன்றிணைப்போம்.”

–  இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“13 பிளஸ் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதாலேயே மஹிந்த ராஜபக்ச கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் 13 ஐ அமுல்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஜனாதிபதி பிரச்சினைகளைத்  தோற்றுவிக்க முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பின் ஒரு திருத்தமாகக் காணப்படும் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் புதிதாகச் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது.” – என்றார்.

Share This Article