மலையகத் தமிழர்களின் அபிலாஷைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
தலவாக்கலையில் நேற்று (12) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நடை பயணக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாம் எதிர்க்கட்சி, ஜனாதிபதி ஆளும்கட்சி. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்குப் புதியவர் அல்லர். எம்மை 25 ஆண்டுகள் அறிந்தவர். இன்று (நேற்று) காலை கூட பேசி தெளிவுபடுத்தினார்.
மலையகத்தில் வீடு கட்டி வாழவும் வாழ்வாதார தொழிலுக்குமான காணி உரிமை, பெருந்தோட்டக் குடியிருப்புகளை அரச பொதுநிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு வருவது, இந்திய அரசு உறுதியளித்துள்ள இலங்கை ரூபா 300 கோடி நன்கொடை பயன்பாட்டுத் திட்டம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையிலான நீண்டகால குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு ஆகியவை தொடர்பில் ஜனாதிபதியுடன் நாம் பேசுவுள்ளோம்.” – என்றார்.