சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் – என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலையில் ஒவ்வொரு சிறைச்சாலை உள்ளது. மட்டக்களப்பு சிறையில் 168 கைதிகளையும் திருகோணமலை சிறையில் 112 கைதிகளையும் தடுத்து வைக்க முடியும். ஆனால் தற்போது மட்டக்களப்பு சிறையில் 593 கைதிகளும் திருகோணமலை சிறையில் 347 கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 425 கைதிகளும் திருகோணமலை சிறைச்சாலையில் 235 கைதிகளும் கொள்ளளவை விஞ்சியதாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களுக்கு தீர்வு காண அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சகல சிறைச்சாலைகளிலும் 28 ஆயிரத்து 453 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்.
போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றங்களுக்கான கைது செய்யப்பட்டவர்களுக்கு வயது அடிப்படையில் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் விசேட புனர்வாழ்வு மையங்களை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது – என்றார்.