14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 30 வயது குற்றவாளிக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனையும் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 18 வயது குற்றவாளிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரு வருட கடூழிய சிறை தண்டனையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்று விதித்தது.
கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை ஒருவரை அவரின் பாதுகாவலரிடம் இருந்து கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக 30 வயது குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆயிரம் ரூபாய் தண்டமும் தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் 12 மாத மாத கால சாதரண சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், தவறின் 12 மாத கால சாதரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதேநேரம், 2015ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை 18 வயது இளைஞர்காதலித்து கடத்தி சென்று திருமணம்செய்து குடும்ப வாழ்க்கை நடத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டில் கைதான நபருக்கும் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியின் சம்மதத்துடன் குற்றவாளிஅவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
எனினும், குற்றவாளி 18 வயதில் இழைத்த இந்தக் குற்றத்தை குற்றமென அறியாது செய்துள்ளார். இதனால், அவருக்கு எதிரான 4 குற்றச்சாட்டுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவும் தவறும் பட்சத்தில் 6 மாத சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மேலும், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு 10 வருடங்களுக்குஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த இரு வழக்குகளும் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நீதிபதி ஏ. எம். ஏ. சகாப்தீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டன