“அரசு எப்போதும் மக்களுக்குச் சார்பான செயற்பாடுகளையேயன்றி மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்து வருகின்றது. அதன் விளைவுகள் அரசுக்குப் பேரிடியாக விழும் நாள் வெகுதொலைவில் இல்லை” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குளிரூட்டி அறைகளில் இருந்து அரசு எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தடுக்க முடியாதுபோகும்.
உரத்தடைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசு நினைவுகூர வேண்டுமென நினைவூட்டுகின்றோம்.
நாடு மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், நாடு முழுவதும் சோறு போடும் விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதால் ஏற்படும் விளைவுகளை அரசு மட்டுமல்லாது நாடு முழுதும் அனுபவிக்க நேரிடும்.
இது நாட்டின் விவசாயத்தை முடக்குவதற்கு எடுக்கும் அரசின் நுட்பமான மற்றும் தந்திரமான முயற்சியா எனவும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
விவசாயிகளை மேலும் ஏமாற்றாமல் அவர்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான தண்ணீரை அரசு திறந்துவிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.