கொழும்பில் பொலிஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு நேற்று (28) கைது செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர இன்று (29) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தரிந்துவை 17 மணித்தியாலங்களுக்குப் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் பொரளைப் பொலிஸார் இன்று பகல் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்துப் பிரிவில் ஊடகவியலாளரை உடனடியாகச் சேர்க்க வேண்டுமெனப் பொலிஸாருக்குச் சட்ட வைத்திய அதிகாரி ஆலோசனை வழங்கியிருந்தார்.
வைத்தியசாலையில் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர் தரிந்துவை கொழும்பு பிரதான நீதிவான் இன்று மாலை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், தரிந்துவைப் பிணையில் விடுவிக்குமாறும் பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன் பிரகாரம் தரிந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தரிந்து உடுவரகெதர பிணையில் விடுவிக்கப்பட்டாலும் பொலிஸாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள அவர், வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு – பொரளையில் நேற்று நடத்திய ஆரப்பாட்டத்தில் காணொளிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் தரிந்து கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்படும்போது அவரின் தலையில் பொலிஸார் கடுமையாகத் தாக்கியிருந்தனர் என்று அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.
பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் தரிந்துவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பார்வையிட்டிருந்தனர். அத்துடன் கைதுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்த அவர்கள், ஊடகவியலாளர் தரிந்துவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
அதேவேளை, பல தரப்பினரும் தரிந்துவின் கைதுக்கு எதிராகவும், விடுதலையை வலியுறுத்தியும் குரல் கொடுத்திருந்தனர்.
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, இலங்கையின் பிரதான ஊடக அமைப்புக்களான உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டிருந்ததோடு பொலிஸ்மா அதிபரிடமும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடும் செய்திருந்தன.
இதையடுத்து ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.