யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு எதிர்காலத்தில் விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் சிற்றுண்டிகளின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பாக பிரதேச செயலர்களால் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் பணித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலர்கள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரதிநிதிகள், உணவகங்களின் உரிமையாளர்கள் இதில் பங்கேற்றனர்.
பொருளாதார நெருக்கடியின் போது பொருள்களின் விலை உயர்வாக இருந்தபோது விலை அதிகரிக்கப்பட்ட சிற்றுண்டிகளின் விலை யாழ். மாவட்டத்தில் பெருமளவில் குறைக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று சோற்றுப் பொதிகளின் விலைகளும் குறைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் சிற்றுண்டிகள் மற்றும் உணவுப்பொதிகளுக்கு ஆகக் கூடிய சில்லறை விலையாக எவ்வளவு ரூபாவை நிர்ணயம் செய்யலாம் என்பது தொடர்பில் 15 பிரதேச செயலர்களையும் அறிக்கையிடுமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் பணித்துள்ளார்.