யாழில் போலி லைசென்ஸ் விவகாரம்: போக்குவரத்துத் திணைக்களத்தினரும் விசாரணைப் பொறிக்குள்!

editor 2

யாழ்ப்பாணத்தில் போலிச் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கடந்த 8ஆம் திகதி போலிச் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் இருவர் கைதாகினர். இதையடுத்து மாவட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு பொலிஸார் தகவல் வழங்கியிருந்தனர்.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) போலிச் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த ஒருவர் கைதாகியிருந்தார். இதையடுத்து நேற்று (17) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைச் சிற்றூழியர் ஒருவரும் இன்னொருவருமாக இருவர் போலிச்சாரதி அனுமதிப்பத்திரத்துடன் கைதாகினர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் குறைந்தது 60 பேர் வரையிலாவது போலிச் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் எழுத்துப் பரீட்சைக்கு இரண்டு தடவைகள் தோற்றி சித்தியடையத் தவறியவர்களை இலக்கு வைத்து, மாவட்ட செயலகத்துக்கு அருகிலுள்ள முகவர்கள் ஊடாகவே போலிச் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்களை முழுமையாகக் கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலதிக விசாரணைகளைத் தொடர்வதற்கும், யாழ். மாவட்ட செயலரின் ஒத்துழைப்புடன் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர். 

Share This Article