குருந்தூர்மலையில் பதற்றம்! பொங்கல் விழாவுக்கு இடையூறு!! – பொலிஸார், எஸ்.ரி.எப். குவிப்பு

editor 2

முல்லைத்தீவு –  குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரும் பௌத்த பிக்குகளும் இடையூறு விளைவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பொங்கல் வழிபாடு இன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு இடையூறு விளைவித்துள்ளனர்.

ஆதி ஐயனார் ஆலயத்தில் பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொலிஸார் சப்பாத்துக் காலால் தீயை மிதித்து அணைத்துள்ளனர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்றுமுல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காகத் தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன் பௌத்த பிக்குகளும் குவிந்திருந்துள்ளனர்.

அங்கு தீ மூட்டி பொங்கல் செய்ய முடியாது எனப் பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாகத் தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ்த் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டனர்.

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன் மேல் கல் வைத்து தீ மூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்தனர்.

தொல்பொருள் திணைக்களத்தினரின் அறிவுறுத்தலின்படி, தகரத்தின் மீது பொங்கல் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

தீ முட்டத் தயாரான போது, முல்லைத்தீவு பொலிஸார் பொங்கலுக்குத் தடையேற்படுத்தினர். சப்பாத்துக் காலால் தீயை மிதித்து அணைத்தனர் என்று கூறப்படுகின்றது.

அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share This Article