மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (14) விடுத்துள்ள அறிக்கையில்,
“கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய மத்திய அரசு, உதவிட உத்தரவாதம் தர வேண்டும்.
மலையகம் – 200 நினைவுறுத்தல் தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு இந்த அடிப்படைகளில் அமைய வேண்டும். இவ்வருட ஆரம்பத்திலேயே நாம் இந்திய தூதுவர் கோபால் பாகலேயிடம், மலையகம் – 200 நினைவுறுத்தல் நிகழ்வுகள் உரையாடி தொடர்பில் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளோம். இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடமும் உரையாடியுள்ளோம். இந்நிலையில், அடுத்தவாரம், இந்தியா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், இவை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண உத்தரவாதங்கள் அளிப்பார் என நாம் நம்புகின்றோம்.
கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பில், இந்திய மத்திய அரசை நாம் நம்பி உள்ளோம். குறிப்பாக, நாடெங்கும் பரந்து வாழும், இந்திய வம்சாவளி மலையக தமிழர் பிள்ளைகளின் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.
இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிக்க, விசேட வேலைத்திட்டம் தேவை. அதேபோல், தேயிலை, இறப்பர் மலைகளில் அல்லலுறும் எங்கள் பெண்களின் வெளிநாட்டு, உள்நாட்டு வேலை வாய்ப்ப்புகளை உறுதிப்படுத்த தாதியர் பயிற்சி கல்லூரி அவசியம். உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியை அடிப்படையாகக் கொண்டு ஒரு முதற்கட்ட பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இவை அனைத்தும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கான விசேட சமூக அபிவிருத்தி திட்டங்களாக முன்னேடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் நமது மக்கள் தொடர்பில் தமக்குள்ள தார்மீகக் கடப்பாட்டை இந்திய மத்திய அரசு நிறைவேற்றும் என நாம் நம்புகின்றோம்.
அதேவேளை, இலங்கையில் மலையக தமிழரது தேசிய அரசியல் அபிலாஷை கோரிக்கைகள் தொடர்பில் நாம் உள்நாட்டில் இலங்கை அரசுடன் பேசுவோம். அதிகாரபூர்வ அரசு தரப்பு பேச்சு குழுவை முறைப்படி அமைத்து, அத்தகைய பேச்சுகளை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.