பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி இரண்டு இராஜாங்க அமைச்சர்களைத் தவிர அரசில் உள்ள வேறு எவரும் பேசுவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கவலையடைந்துள்ளார்.
இதனால் அரசின் முக்கியஸ்தர்கள் பலரை அழைத்து அண்மையில் இது பற்றி ஜனாதிபதி பேசியுள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
“எல்லோரும் பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றார்கள். அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியோ – தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் பற்றியோ பேசுவதில்லை.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டியுள்ளது. மக்களிடம் உண்மையைக் கூறாமல் இருந்தால் எப்படி தேர்தலை எதிர்கொள்வது?
அரசின் அபிவிருத்திகள் தொடர்பில் நான்தான் பேச வேண்டியுள்ளது” – என்று மேலும் கவலையுடன் ஜனாதிபதி பேசியுள்ளார் என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.