அடுத்த மாதம் (ஜூலை) இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அவரது விஜயத்துக்கு முன்னதாகவே இந்தியா எதிர்பார்க்கின்றது என்று அறியமுடிகின்றது.
அவரது விஜயத்துக்கு முன் மாகாண சபைத் தேர்தல் உட்பட பல நிபந்தனைகளுக்கு ரணில் உடன்பட வேண்டி வரும் என்று இந்திய தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தகவல் இந்தியத் தரப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே பஸில் ராஜபக்ச ‘மொட்டு’வின் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களை பத்திரமுல்லை காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பேசியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவுள்ளது. அது தொடர்பான நிபந்தனைக்கு அவர் இந்தியா செல்லும் முன்பே உடன்பட வேண்டி வரும். இந்தியா இதையே எதிர்பார்க்கின்றது என்று பஸில் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பணம் இல்லை என்று கூறி வரும் ரணில் அரசு இதே காரணத்தை இந்தியாவிடம் கூறி மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.