யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஆட்சியாளர்கள் மத்தியில் சிறந்த அர்த்தபூர்மான மாற்றம் ஒன்று ஏற்படாத வரை இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு.தமிழ்,முஸ்லிம்,மக்களின் தனித்துவ அடையாளங்களை அழித்து சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கி இன,மத வெறி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுவது சிறந்த எடுத்துக்காட்டு அல்ல.
இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இழுபறி நிலையில் உள்ள நிலையில் பூகோள ஆதிக்க சக்திகள் தமது குறுகிய நோக்கங்களை இலங்கை ஊடாக செயற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்கள் இயற்றப்படவுள்ளன.
இனவாத இலட்சியங்கள் கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறையைமை இல்லாதொழித்து தமிழ் தேசியத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் யாப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளின் ஊடாக இனவாத செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.தொல்பொருள் சக்கரவர்த்தி என குறிப்பிடப்படும் எல்லாவெல மேதானந்த தேரர் கடும் இனவாதி குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை ஆகவே காணிகளை தமிழர்களுக்கு வழங்க கூடாது என ஜனாதிபதிக்கு அவர் கட்டளை பிறப்பித்துள்ளார்.
குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு மணலாறு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் தமது சொந்த காணிகளில் மீள் குடியேற முடியாத அளவுக்கு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.
குருந்தூர் மலை பகுதி ஆங்கிலேயர் காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட போது வர்த்தமானியில் :குருந்தூர் காடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.எவ்விதத்திலும் பௌத்தம் என்ற சொல் பயன்படுத்தவில்லை.ஆனால் தற்போது குருந்தூர் மலை தொடர்பில் வெள்ளையர்கள் வெளியிட்ட வர்த்தமானியையும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் போக்கு பௌத்த கொள்கைகள் கொண்ட தரப்பினரால் அறிக்கையிடப்பட்ட தொல்பொருள் அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகள் மீள ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.