நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் டிரான் அலஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்டோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குத் தெரியாமல் அரச நிகழ்ச்சிகளுக்கு தமது உறுப்பினர்களை அழைப்பது பொருத்தமற்றது என அக்கட்சியின் தலைவர்கள் அங்கு சுட்டிக்காட்டினர்.
அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான விசேட கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.