சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் – ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 121.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களையும், ஸடீவ் ஸ்மித் 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின், மொஹம்மட் சிராஜ் 108 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹம்மட் சமி 122 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாட ஆரம்பித்த இந்திய அணி 69.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக ரஹானே 89 ஓட்டங்களையும், ஷர்துல் தாகூர் 51 ஓட்டங்களையும், ரவிந்திர ஜடேஜா 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் 83 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், கெமரூன் கிரீன் 44 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக அலெக்ஸ் கெரி 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 444 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 49 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதற்கமைய, இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட் (163 ஓட்டங்கள்) தெரிவானார்.