இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்று 27 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரை வென்ற சரித்திரம் படைத்தது.
சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோ 96 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களையும், பெத்தும் நிஸங்க 45 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக் கொண்டனர். ஏனைய வீரர்கள் பெரிதாக ஓட்டங்களை குவிக்கவில்லை.
அதன் அடிப்படையில் இந்திய அணி வெற்றி இலக்காக 249 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. குறித்த இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்தில் அதிரடியை வெளிப்படுத்தியது. எனினும் சீரான இடைவெளியில் இலங்கையில் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் போன இந்திய அணி இறுதியில் 26.1 ஓவர்கள் நிறைவில் 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் இலங்கை அணி 27 வருடங்களின் பின்னர் இந்திய அணியுடன் ஒருநாள் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை இந்திய அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.