க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று தொடங்கவுள்ள நிலையில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரின் தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
உழவியந்திரத்தை முந்திச் செல்ல முயன்ற டிப்பர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏ -9 நெடுஞ்சாலையில் கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான யாழ்ப்பாணம் – வடமராட்சி – ஆழியவளையை சேர்ந்த கந்தசாமி கலைரூபன் (வயது 38) என்பவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், விசுவமடுவிலிருந்து ஆழியவளையை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பளையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர், டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற சமயம், எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தையடுத்து டிப்பர் சாரதியும் அதில் இருந்தவர்களும் வாகனத்தை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேசமயம், விபத்தில் பலியானவ ரின் மகன் இன்றைய தினம் ஆரம்பமாகும் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.