ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலர் பதவி விலகல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலர் பதவி விலகல்!

editor 2

ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் பிரபல உறுப்பினர்கள் பதவிகளிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் சனிக்கிழமை (24) கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹாரே பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் தனது பதவி விலகலுக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில அதிருப்தியான சூழலே அவர் பதவி விலகக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தான் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி இம்தியாஸ் பாகீர் மாக்கார் ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பில் தன்னால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தலைமைத்துவத்தினால் கரிசனை கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பதுளை மாவட்ட தலைவரும், பண்டாரவளை தொகுதி அமைப்பாளருமான சமிந்த விஜேசிறி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவரது பதவி விலகல் கட்சி தலைவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். எவ்வாறிருப்பினும் கட்சிக்குள் சில முரண்பாடுகள், அதிருப்திகள் காணப்படுவதாலேயே அவரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை தேர்தலுக்கு முன்னதாகவே கட்சியின் முன்னாள் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, அவரைத் தொடர்ந்து சம்பிக ரணவக்க உள்ளிட்டோரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகினர்.

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஐக்கிய மக்கள் சக்தியை பகிரங்கமாக விமர்சித்து வருவதோடு;, தமது ஆதரவு குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளதாகக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article