வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
காணிகளின் உரித்தை கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
காணிகளை சொந்தமாக வைத்திருப்பவர்களிடம் தங்கள் உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு மக்களின் நம்பிக்கையை வெல்லும் முறையான வேலைத்திட்டம் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டதாக பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில குழுக்கள் மோசடியாக நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க முறையான வழிமுறையை அறிமுகப்படுத்தி, சட்டப்பூர்வ உறுதிப்படுத்தல்களுடன் மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் ஒரு சரியான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, அதற்கான தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.