கொழும்பில் நினைவேந்தலைக் குழப்பியோரைக் கைது செய்க! – சந்திரிகா கோரிக்கை

editor 2

கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நினைவேந்தல் உரிமையை எவரும் தடுக்க முடியாது. போரில் இறந்த உறவுகளை நினைவேந்த அனைவருக்கும் உரிமையுண்டு. இதில் சிங்களவர்கள் – தமிழர்கள் – முஸ்லிம்கள் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது.

கொழும்பில் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வொன்றை ஒரு குழுவினர் குழப்ப முயன்றதைத் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன். கடும் விசனம் அடைந்தேன்.

இது ஜனநாய நாடு என்று கூறும் ஆட்சியாளர்கள் இந்த அடாவடிச் செயலைப் பார்த்து வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

அந்த அடாவடியில் ஈடுபட்ட கும்பலைப் பொலிஸார் தடுத்து நிறுத்திய போதிலும், ஏன் அவர்களைக் கைது செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது?” – என்றார்.

Share This Article