பொலநறுவையின் புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. தொல்பொருள் திணைக்களமும் – சில பிக்குகளும் இணைந்தே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்று பொலநறுவை இந்துக் குருமார் ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
அதேவேளை, சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட முதலாம் இலக்க சிவன் ஆலயம் தற்போது பாடப் புத்தகத்திலேயே உள்ளது. அந்த ஆலயம் இடிந்து விழுந்துவிடப்போகிறது என்ற பொய் கூறி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் இடித்து அழிக்கப்பட்டுவிட்டது – என்று மட்டு. ஊடக அமையத்தில் நேற்று இந்துக்குருமார் ஒன்றியம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதலாம் இலக்க சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் தற்போது இரண்டாம் இலக்க சிவன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்றாலும் இந்த சிவலிங்கம் இன்னமும் பிர திஷ்டை செய்யப்படவில்லை. இதே நேரம், ஆலயத்தின் நிர்வாகம் சிங்களவரிடமே உள்ளது. இதனால், நாம் ஆலய அமைப்புப் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளது.
இதேநேரம், முத்துக்கல் என்ற கிராமத்தில் சிவ ஆலயம் மறைக்கப்பட்டுள்ளது. அங்கு சிவலிங்கம் உடைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலயம் தற்போது பிக்கு களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு செல்ல அனுமதியில்லை.
தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் இதனை பிக்குகள் செயல்படுத்தி வருகின்றனர்.