ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு அழைப்பு விடுத்தால் அதை ஏற்கத் தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எனக்கு இதுவரை யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், என்னைச் சந்திப்பவர்கள் எல்லாம் சொல்வது இப்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்றால் உங்களைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று.
நான் இப்போது அரசியல் செய்வது ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு அதற்குள் இருந்து அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்வேன்.
இந்த நாடு பொருளாதார ரீதியில் சீரழிவதற்குக் காரணம் ஊழல், மோசடிகள்தானே தவிர பொருளாதார நிபுணர்கள் அல்லர்.
ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவு பெற்ற ஊழல்மிக்க வர்த்தகர்களுமே இந்த நாட்டைச் சீரழித்தனர்.
இவர்களிடமிருந்து நாம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கினார் என்பதற்காக இந்த நாடு முன்னேறிவிடாது” – என்றார்.