இலங்கையில் நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான அமைச்சரவை அனுமதிக்கமைய நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய மசோதாவை அறிமுகப்படுத்துவதானது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனிநபர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளைக் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதற்கமைய பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இன்று (16) முதல் 14 நாட்களுக்குள் செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம், எண். 1க்கு அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடித உறையின் இடது மூலையில் ‘பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கான பரிந்துரைகள்’ என குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் அடங்கிய கடிதங்களை நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, இலக்கம் 19, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அல்லது legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.