இந்த அரசுடன் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை! – சஜித் தெரிவிப்பு

editor 2

பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை இந்த அரசு தொடர்ந்தும் மீறி வருகின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில் நேற்று (18) இடம்பெற்ற அமைதிவழி ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயைப் பார்வையிடுவதற்காக இன்று (19) ராகம வைத்தியசாலைக்குச் சென்ற போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும். அரசு இதனை இல்லாதொழிப்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் வன்மையாக நிராகரிக்கின்றோம்.

தேர்தலை இடைநிறுத்தி சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட இந்த அரசு மீறி வருகின்றது. இவ்வாறான போக்குடைய அரசுடன் எனக்கோ அல்லது மக்களுடன் தொடர்புள்ள எமது கட்சியில் உள்ள எவருக்குமோ எந்தத் தொடர்பும் இல்லை. இந்த மக்கள் விரோத அரசுடன் ஒருபோதும் இணைந்துகொள்ளப் போவதில்லை.” – என்றார்.

Share This Article