அண்மைய காலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
மிகமோசமானதும், மனிதத்தன்மையற்றதுமான பகிடிவதையின் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம்.
எந்தவொரு கல்வியியல் கட்டமைப்புக்களிலும் எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் பகிடிவதை மற்றும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அது நாட்டின் சட்டத்தை மாத்திரமன்றி, அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளையும் மீறுகின்ற செயலாகும்.
அதேவேளை அண்மையகாலத்தில் பதிவான சில பகிடிவதை சம்பவங்கள் அக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் புறக்கணிப்பு அல்லது அலட்சியத்தினால் நடைபெற்றிருக்கிறது என நாம் கருதுவதுடன், அவர்களும் இச்சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
அதேபோன்று 1998 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க கல்விக்கட்டமைப்புக்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வன்முறை தடுப்புச்சட்டத்தின் சரத்துக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கிறோம்.
இவ்வாறான சட்டவிரோத பகிடிவதை செயற்பாடுகளை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்விக் கட்டமைப்புக்களின் அதிகாரிகள் முன்னெடுக்கவேண்டும்.
அத்தோடு மேற்படி சம்பவம் தொடர்பில் சமனலவௌ பொலிஸாரினால் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.