பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரிடம் தொலைபேசியில் பேச வேண்டுமெனில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டியது அவசியமாகும். அந்த அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுப்பிரிவின் ஊடாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதற்கு முயற்சித்தமை தொடர்பிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திரகாந்தனின் அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இது குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்துழைப்பினைக் கோரியிருந்தனர்.
சந்திரகாந்தனின் பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுப்பிரிவின் சீ.ஐ.மாதவ ஊடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பாதுகாப்பு அதிகாரியிடம், சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு பொருத்தமான அதிகாரியிடம் ஒரு வாய்ப்பைப் பெறுமாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள வேண்டியேற்படும் போது, அது பொலிஸ் பாதுகாப்பு தகவலின் ஊடாகவே முன்னெடுக்கப்படுவது வழக்கமாகும். கைது செய்யப்பட்டுள்ள ஒருவரிடம் பேச வேண்டிய தேவையேற்படும் போது, தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் வழக்கமாகும். அதுவே முதலில் முன்னெடுக்கப்படும்.
இந்த சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினர் குறித்த குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியுடன் பேசியதோடு, அவர் குற்றப்லுனாய்வு பிரிவின் பணிப்பாளரிடம் ஆலோசனையை பெற வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த அதிகாரி மீண்டும் அழைப்பினை மேற்கொண்ட போது ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவுக்கு, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் தொலைபேசி அழைப்பிற்கு வாய்ப்பளிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அதிகாரியை இடமாற்றம் செய்வதாயின் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு அது தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்துவது வழக்கமான நடைமுறையாகும்.