தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணி வரை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை கிளை தெரிவித்துள்ளது.
தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை அத்தியட்சகரின் நிர்வாக செயல் திறன் இன்மை, நிர்வாகத்தில் காணப்படும் குறை பாடுகள் மற்றும் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அவசர சிகிச்சை பிரிவில் தனிநபர் ஒருவர் ஊழியர்களின் கடமைக்கும் ஏனைய நோயாளிகள் சிகிச்சை பெறவும் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை என்பவற்றை கண்டித்தும் மருத்துவ அத்தியட்சகருக்கு எதிராக நடுநிலையான – பக்கச் சார்பற்றி விசாரணையை வலியுறுத்தியுமே இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்கு ஏனைய மருத்துவமனை தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்கவுள்ளன – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘மக்களை பாதிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இந்த தொழிற்சங்க போராட்டத்தை பாராளுமன்ற உறுப்பினராக நான் அனுமதிக்கப் போவதில்லை’, என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா தனது சமூகவலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.