மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்) பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் நான்காவது கட்ட கடனாக 34.4 கோடி டொலர்களை வழங்கவுள்ளது.
இந்த நிலையில், செலவு மீட்பு விலையை மீட்பதை பொறுத்து அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 சதவீதம் குறைத்தது. இது செலவு மீட்பு விலை நிர்ணயமல்ல என்பதால் இதற்கு சர்வதேச நாணய நிதியம் அதிருப்தி தெரிவித்தது.
இந்த நிலையில், மின்சார உற்பத்தி செலவை பிரதிபலிக்கும் மின்சார கட்டணம் அவசியம் என்று ஐ. எம். எவ். வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், மின்சார விலை நிர்ணய சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் திருத்தப்படவுள்ளது.
கட்டணத்தை திருத்தியமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளதாகவும் அது நிறைவடைந்ததும் பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அது சமர்ப்பிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.