தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு தெற்கு
என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமையை
வழங்குவதோடு இலங்கையர்கள் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர
குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம் பெற்ற மக்கள சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாட்டில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்க ளுக்கிடையில் பாரிய இடை வெளிகாணப்பட்டது. பழைய அரசியல்வாதிகளினால் இந்த பிரிவினைவாதம்ஏற்பட்டது. இதன் காரணமாக வடக்கு மக்கள் வடக்கின் தமிழ்த் தலைவர்களையும், தென்பகுதி மக்கள் தெற்கின் சிங்கள கட்சிகளின் தலைவர்களையும், முஸ்லிம் மக்கள் முஸ்லிம் தலைவர்களையும்
தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் முதற் தடவையாக கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு தமிழ்மக்களும் தென்பகுதி சிங்கள மக்களும் கிழக்கு முஸ்லிம் மக்களும் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தார்கள்.
அவர்கள் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது பாரிய நம்பிக்கை வைத்தமையினாலேயே தேர்தலில் எமக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள்.
அத்துடன் பிரிந்திருந்த அனைவரும் தற்போது ஒன்றாகியுள்ளனர். இனிமேல் நாம் பிரியவேண்டிய தேவை இல்லை.
எமக்குள் பிளவு ஏற்படவும் தேவையில்லை. இனவாத அரசியல் எமக்கு இனியும் வேண்டாம். அதேசமயம் நாம் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான அரசியலை முன்னெடுத்துள்ளனர்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அனைத்து மதங்களுக்கும். அனைத்து கலாசாரங்களுக்கும். மதிப்பளிப்பதோடு அனைவரும் இணைந்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும்.
அத்துடன் மொழி கலசாரம் ரீதியாக எவரும் பிரிந்து செயல்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளோம். நாம் அனைவரும் இலங்கையர்களே. வடக்கு கிழக்கு தெற்கு என அனைத்துபகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு சமமான உரிமை வழங்கப்படும் என்றார்.