சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையில் மூவரடங்கிய சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புக்குழுவின் இணை உறுப்பினர்களாக நீதியரசர் (ஒய்வுநிலை) எம்.என்.பி.இத்தவெல மற்றும் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் எம்.லலித் ஏக்கநாயக்க அங்கம் வகிக்கின்றனர்.
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது பதவிக்கான அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக சபாநாயகரால் இந்த சிறப்பு குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது. இந்த குழு நேற்றைய தினம் முதல் தடவையாக கூடி கலந்துரையாடியுள்ளது. இந்த குழு நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் கூடவுள்ளது.
2002ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கை முறை) சட்டத்தின் 5ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளுக்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் அதிகாரம் மற்றும் தத்துவங்களை பாரதூரமான முறையில் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஆராய்வதற்கான சிறப்பு குழுவை அமைக்கும் யோசனை கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.