நபரொருவரால் கொட்டாஞ்சேனையில் கடத்திச்செல்லப்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (12) இரவு கொட்டாஞ்சேனையின் வாசல வீதியில், இயங்கும் நிலையில் தனது காரை நிறுத்திவிட்டு, உணவு வாங்குவதற்காக உணவகத்திற்குள் காரின் உரிமையாளர் சென்றுள்ளார். காரில் கர்ப்பிணியான மனைவியையும் தயாரையும் விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது ஒரு சந்தேக நபர் காரில் ஏறி, இரண்டு பெண்களையும் உள்ளேயே வைத்துக்கொண்டு காரை கடத்தி தப்பிச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில், விசாரணைக்காக கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு ஒரு முச்சக்கரவண்டியில் வந்த மட்டக்குளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, குறித்த கார் கடத்தப்பட்டமை குறித்து கிடைத்த தகவலின் பேரில், தப்பிச் சென்ற காரை பின்தொடர்ந்து சென்று நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவுகளை மீறி சந்தேக நபர் காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பின்னர்,கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள புளூமெண்டல் ரயில் பாதைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
காரில் இருந்த இரண்டு பெண்களும் காயமின்றி மீட்கப்பட்டதாகவும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.