புதுவருடத்தை முன்னிட்டு ஊக்குவிப்புத் தொகை; வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மறுப்பு!

editor 2

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் புதுவருடத்தை முன்னிட்டு 10ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக தெரிவித்து வெளிநாடொன்றில் இருந்து செயற்படும் யூடியுப் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 10ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாக தெரிவித்து வெளிநாடொன்றில் இருந்து செயற்படும் யூடியுப் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றாக உண்மைக்கு புறம்பானதாகும். புலம்பெயர் தொழிலாளர்களின் கடவுசீட்டின் பிரதி ஒன்றை, நாட்டில் இருக்கும் எந்தவொரு பணியகத்தின் காரியாலயத்துக்கு அனுப்புமாறு குறித்த காணொளி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எந்த அறிவித்தலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எந்த சந்தர்ப்பத்திலும் விடுக்கப்படவில்லை. அதனால் இவ்வாறான மோசடி செயற்பாடுகளுக்கு சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை இதுவரை பணியகத்தினால் செயற்படுத்தியதில்லை என்பதுடன் இது புலம்பெயர் தொழிலாளர்களை ஏமாற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பிரசாரமாகும். இவ்வாறான உண்மைக்கு புறம்பான பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என பணியகம் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை பிரசாரம் செய்வதற்காக இவ்வாறான சமூக ஊடகங்களுக்கு அதிகாரம் வழங்கியதில்லை என்பதுடன் இவ்வாறான மோசடிகார்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டத்தை நிலைநாட்டுவோம்.

Share This Article