சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த 2023 மார்ச் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது.
இச்செயற்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் அதன் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் தலைமை தாங்கினார். அதன்மூலம் பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அவர் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.
குறிப்பாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் பெரும்பாகப்பொருளாதார மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்வதில் பீற்றர் ப்ரூயரின் தலைமைத்துவம் முக்கிய பங்காற்றியது.
இவ்வாறானதொரு பின்னணியில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதித்தலைவராவார்.
அதன்படி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எவான் பபஜோர்ஜியா தலைமைத்துவத்தை வழங்குவார்.
I