உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவுக்கு வந்தவுடன் சட்ட திருத்தமொன்றை மேற்கொண்டு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்த வட, கிழக்கு தமிழ்த் தலைவர்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா என்பது உங்களுக்கு இரண்டாவது வீடு போன்றது. உங்களது பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரையாடுவதற்காக நீங்கள் எந்நேரமும் டில்லிக்கு வரலாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் மனிதாபிமானப் புரிந்துணர்வின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இழுவைமடிப் படகு முறைமையிலான மீன்பிடி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்திருத்தச்சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண முடியாது. ஆகவே, ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்று சமஷ்டி அடிப்படையில் அதிகாரப்பகிர்வுடன் தீர்வு காணப்படுவதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வட,கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், இலங்கைத் தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பற்கேற்றனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏழு வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படாதிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பகிரங்கமாக வலியுறுத்தியமைக்காக எமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்தோம்.
13ஆவது திருத்தச்சட்டம் இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தபடவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு குறித்த திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டலும் அது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அதிகாரப்பகிர்வு உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதை குறிப்பிட்டோம்.
ஆகவே, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை சுட்டிக்காட்டியதோடு உதாரணமாக குச்சவெளியில் சொற்ப அளவிலான பௌத்தர்களுக்காக 32இற்கும் மேற்பட்ட விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பல இந்துக் கோவில்கள் விகாரைகளாக உருமாற்றம் செய்யப்படுவதையும் எடுத்துரைத்தோம்.
பொருளாதார நெருக்கடியான சூழலில் ஒட்டுமொத்த இலங்கைக்கு உதவிகளை வழங்கியமைக்காக நன்றிகளைத் தெரிவித்ததோடு, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வான்வழி, கடல்வழி இருதரப்பு தொடர்புகளை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரினோம்.
அத்துடன், வடக்கு,கிழக்கு மக்களுக்காக வீட்டுத்திட்டங்கள் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இந்தியாவுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, தொடர்ச்சியாக அம்மாகாணங்களின் அபிவிருத்திக்காக முதலீடுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினோம்.
இந்திய, இலங்கை மீனவர்கள் விடயத்தில் பல்வேறு மட்டப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமான மீன்பிடி முறைமைகள் முற்றாக நிறுத்தப்படுவதன் ஊடாக இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கோரினோம் என்றார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில், இந்தியா வடக்கில் கலாசார மண்டபத்தினை நிர்மாணித்து நன்கொடையாக வழங்கியுள்ளது. அத்தகைய பணியை வேறெந்த நாடும் மேற்கொள்ளாது. அந்த வகையில் அளப்பரிய அப்பணியை நாம் வரவேற்று நன்றி கூறுகின்றோம். அதேநேரம், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளில் மற்றுமொரு முக்கிய தேவையாக உள்ளது. அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் அவசியமாக இருக்கின்றன. ஆகவே தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக் கூடியவாறான முதலீட்டுத் திட்டங்களை இந்தியா முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
அடுத்ததாக, இந்திய, இலங்கை மீனவர்கள் விடயம் சம்பந்தமாகவும் கரிசனைகளை வெளிப்படுத்தினோம். அப்பிரச்சினை நீண்டகாலமாக இருந்தாலும் தற்போது அதிகமாக வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். ஆகவே அப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வினை எடுக்க வேண்டும் என்றும் கோரினோம்.
அச்சமயத்தில், இலங்கை, இந்திய மீனவர்கள் சகோதரர்கள். அவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேச்சுக்கள் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். ஆகவே மக்கள் பிரதிநிதிகளும், மீனவப்பிரதிநிதிகளும் கூட்டிணைந்து இருதரப்பு பேச்சுக்களை முன்னெடுப்பதன் ஊடாக பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வினை எடுக்க முடியும். அதற்கு மத்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார் என்றார்.
இதேநேரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவிக்கையில், எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டு அமைவாக, இந்தியா தனது தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் இலங்கையில் நடைபெறுகின்ற விடயங்களில் கரிசனைகளைக் கொள்வதற்கான முழுமையான உரித்தையும் கொண்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையால் தான் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையில் கிட்டியதொரு அணுகுமுறை ஏற்பட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அதனை மலினப்படுத்தும் வகையில் ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில் மத்திய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் மாநிலத்தில் மேலோங்கி நிற்கும் என்பதை சுட்டிக்காட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது நடைமுறை ரீதியாக அதிகாரப்பகிர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தகைய நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையை 13ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தி தீர்க்க முடியாது.
ஆகவே, இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் நடைமுறைரிதியான இலக்குகளை அடைவதாக இருந்தால் ஒற்றையாட்சிக்கு அப்பால் செல்ல வேண்டும். உங்களது முதலாவது விஜயத்தின் போது பாராளுமன்றில் உரையாற்றிய தருணத்தில் மத்தியும், மாநிலமும் இசைந்தொழுகும் சமஷ்டி முறைமை பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை நாம் முழுமையாக வரவேற்கின்றோம். அதனை மையப்படுத்திய அதிகாரப்பகிர்வுடனான தீர்வொன்றுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அடுத்ததாக, வடக்கு,கிழக்கில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது. அந்த அபிவிருத்தி திட்டச் செயற்பாடுகளில் இந்தியாவே முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இந்தியாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கருதுகின்றோம். அங்கு வேறெந்த தரப்புக்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்பதிலும் நாம் கரிசனையாக இருக்கின்றோம். எனினும் வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியானது, அங்குள்ள பெரும்பான்மை குடிப்பரம்பலை மாற்றுவதாக அமையக் கூடாது என்பது எமது கோரிக்கையாக உள்ளது.
இந்திய, இலங்கை மீனவர்கள் விடயத்தில் நிரந்தரமான தீர்வு அவசியமாகின்றது. இது வடக்கு மீனவர்களின் இருப்பு சார்ந்த விடயமாகும். தற்போதைய நிலையில் இந்தப்பிரச்சினையானது ஒட்டுமொத்த இனத்துக்கும் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆகவே இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானமொன்றை அறிவிக்கும் பட்சத்தில் நாம் தமிழகத்திற்கு நேரில் சென்று உரையாடுவதற்கும், ஏனைய மட்டங்களிலான பேச்சுக்களை முன்னெடுக்கவும் தயாராகவே உள்ளோம் என்றார்.
மேலும், இந்தச் சந்திப்பின்போது, தமிழர்களின் விடயங்கள் சம்பந்தமாக தொடர்ச்சியான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கும், கவனத்துக்கு கொண்டுவருவதற்குமான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தலைவர்கள் கோரினர். அச்சமயத்தில் பிரதமர் மோடி, இந்தியா உங்களின் இரண்டாவது வீடாகும். நீங்கள் எந்தநேரமும் டில்லிக்கு வருகை தரலாம். ஆனைத்து மட்டங்களிலும் பேச்சுக்களை முன்னெடுக்கலாம் என்று கூறியதோடு 45நிமிடங்களாக நீடித்த சந்திப்பை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தார்.