அமெரிக்காவின் புதிய வரி விதிப்புத் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

editor 2

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையே இன்று சனிக்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த வரி விதிப்பின்போது நாடென்ற ரீதியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இந்த விடயத்தில் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியமான நிவாரணங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விரைவில் அமெரிக்க அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் ஏ.விமலேந்திராஜா, ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, வெளிவிவகார அமைச்சின் பொருளாதார அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் தர்ஷன பெரேரா, இலங்கை வணிகச் சபையின் தலைமை பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, பிராண்டிக்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்ரப் ஒமர், மாஸ் ஹோல்டிங்ஸ் இணை நிறுவனர் ஷெராட் அமலீன், ஹேலிஸ் குழுமத் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் ஆனந்த கல்தேரா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மேலும், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

Share This Article