சொத்து ஒன்றை குத்தகை அல்லது வாடகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்த ஆவண பத்திரத்துக்கான முத்திரை வரி 100 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (ஏப்ரல் 01) செவ்வாய்க்கிழமை முதல் இந்தக்கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.
ஏதேனும் ஒரு சொத்தை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு வழங்கும்போது நீண்டகால குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு உரிய முழுமையான காலப்பகுதிக்காக முதல் கட்டணம் உள்ளடங்கலாக குத்தகை அல்லது வாடகையானது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் அல்லது அதன் ஒரு பகுதிக்காக 10 ரூபாய் முத்திரை கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.
இந்தக் கட்டணம் நாளை முதல் 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பிரசுரித்துள்ளார்.
2006ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக முத்திரை வரி கட்டணம்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நுகர்வோர் கடன் சட்டத்தின் பிரகாரம் உறுதியளிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் செலுத்த வேண்டிய முழு பெறுமானத்தில் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய் அல்லது அதன் ஒருபகுதிக்காக அறவிடப்படும் முத்திரை கட்டணம் திருத்தம் செய்யப்படவில்லை.
இதற்கமைய 10 ரூபாயாக உள்ள குறித்த முத்திரை கட்டணம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.